அமெரிக்காவுடனான ஒப்பந்த அளவை விட கூடுதலாக டீசலை ஏற்றுமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
உலக சந்தையில் நிலவும் டீசல் தட்டுப்பாட்டைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவுடன் ஒரு விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டார். அதன்படி, உலக நாடுகளுக்கு உடனடியாக 3 லட்சம் டன்களும், அடுத்தடுத்த மாதங்களில் 10 லட்சம் டன்கள் வரையிலும் டீசல் வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டது. இந்த வர்த்தகம் எவ்விதத் தடையுமின்றி நடைபெற ஏதுவாக, ரஷ்ய எரிபொருள் மீது விதிக்கப்பட்டிருந்த சில பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தற்காலிகமாக நீக்கியது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுடன் ஒப்புக்கொண்ட அளவை விடவும் கூடுதலாகவே டீசலை ஏற்றுமதி செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்யா தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் கூறுகையில், "தங்கள் நாட்டின் டீசல் ஏற்றுமதித் திறனை விரைவாக உயர்த்தி, இந்த ஆண்டு இறுதிக்குள் மாதத்திற்கு 30 முதல் 35 லட்சம் டன்கள் வரை உலக சந்தைக்கு விநியோகிக்க முடியும்" என்றார். ஒப்பந்தத்தைத் தாண்டி கூடுதல் டீசல் விற்பனைக்கு வரவிருப்பது
சர்வதேச டீசல் தட்டுப்பாடு குறித்த அச்சத்தைப் போக்கியுள்ளது.
இதன் நேரடித் தாக்கமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உடனடி சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை 1.2 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 105.34 டாலராக விற்பனையானது. அதேபோல அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலையும் 1.3 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 92.48 டாலராக வீழ்ச்சியடைந்தது.